ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் காரியாலயதொன்றை கொண்டு நடத்துவதற்காக, முன்னாள் அமைச்சர்களினால், ராஜகிரிய புத்கமுவ வீதியில், கெமுனு மாவத்தையிலுள்ள வீடொன்று, மாதாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என, சுதந்திரக் கட்சியின் கடுவளை அமைப்பாளர் ஜி;.எச் புத்ததாஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரான, சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணங்களை கேட்டறிந்து கொள்வதற்கும், சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள், சட்டத்தரணிகள், இளைஞர்கள்,யுவதிவகள் உள்ளிட்ட பல அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் இந்த இடத்தை கேந்திரமாக கொண்டு, எதிர்காலத்தில் பல்வேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலேயே, அந்த வீடு வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டங்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியொன்றை அமைக்கப்படவேண்டும். அவ்வாறானதொரு கூட்டணி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் எக்காரணங்களை கொண்டும் அமைக்கப்படக்கூடாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களில் 65 சதவீதமானோர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிரானவர்கள் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.