யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியான வித்தியா கொலையை விசாரணைக்கு உட்டுத்திய உதவி பொலிஸ் அதிகாரி பீ.எஸ். திசேரா, உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் களப்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
அவருடைய இடமாற்றத்துக்கு பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இடமாற்றம் தொடர்பிலான கடிதம், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அதிகாரி பீ.எஸ்.திசேரா, கம்பஹா ரத்துபஸ்வல எனுமிடத்தில் சுத்தமான குடிநீர் கேட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல், ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட, பெரும் சர்ச்சைக்குரிய பல்வேறான சம்பவங்களை, இவர் விசாரணைக்கு உட்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பஹா ரத்துபஸ்வல துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், இராணுவத்தில் ஐவருக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.