தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டுமெனக் கோரியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், குறுகிய அரசியல் காரணங்களுக்காக, தன் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோj்தாபய ராஜபக்ஷவுக்கு, அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடித்தில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள ரிஷாட், இனவெறியைத் தூண்டவும் குறுகிய அரசியல் காரணங்களுக்காகவும், தான் இலக்கு வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வில்பத்து சரணாலயத்தை அழித்து, முஸ்லிம்களை மீளக் குடியமர்த்தியதாகவும் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“மேலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, நாடாளுமன்றத் தெரிவுக் குழு விசாரணை நடத்தியதோடு, பொலிஸ் விசாரணையின் போது, நான் நிரபராதி என்று கூறி, அப்போது பதில் கடமையாற்றிய பொலிஸ் மா அதிபரால், சபாநாயகருக்கு அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது” என்றும், ரிஷாட் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன் மீதான சேறுபூசல்கள் காரணமாக முஸ்லிம் சமூகமும் சிரமத்துக்கு ஆளாவதாகவும் வில்பத்து பாதுகாப்பு பகுதியில் உள்ள அரசு நிலங்கள் எவையும், தனது அதிகாரத்தால் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.