ஆபிரிக்காவின் மாலி ராஜ்ஜியத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலி இராச்சியத்தில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரை இலக்கு வைத்து நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் கெப்டன் ஒருவரும், கோப்ரல் ஒருவரும் பலியாகினர்.
அத்துடன், மேலும் மூன்று இலங்கை படைச் சிப்பாய்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை படையினரது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வாகனத்தை இலக்கு வைத்து தொலைதூர இயக்கி மூலம் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ கெப்டன், பொலன்னறுவையைச் சேர்ந்த எச்.டபிள்யு. ஜயவிக்ரம என்பவராவார்.
அவர் 11ஆவது இலகு காலாட்படையில் பணியாற்றினாரென இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், குறித்த தாக்குதலில் உயிரிழந்த மற்றுமொருவரான கோப்ரல் எஸ்.எஸ். விஜேகுமார குருநாகல் பொல்பிட்டிகம பிரேதேசத்தைச் சேர்ந்தவராவார்.
அவர் முதலாவது இயந்திர காலாட்படையைச் சேர்ந்தவராவார் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.