முல்லைத்தீவு நாயாற்றுபகுதியில் உள்ள நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில், பலவந்தமாக விஹாரையொன்றை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிக்கு, முல்லைத்தீவு நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில், சகல நிர்மாணப்பணிகளும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையிலும் முழுமையாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் கட்டளையிட்டுள்ளார்.
இந்நிலையில், அவ்விடத்துக்கு நேற்று 25 முதல் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 ஆம் திகதியன்று செம்மலை கிராம மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த கொழும்பு மேதாலாங்கார கின்னித் தேரர் , முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் இருதரப்புக்கு எதிராகவும், நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அதனடிப்படையில், மேற்படி வழக்கு கடந்த 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தொல்பொருட்கள் நிறைந்த இடமாகுமென, பௌத்த தேரர் தெரிவித்துள்ளார். எனினும், அது கோவிலுக்குரிய இடமாகும் என்று, நீராவியடிப்பிள்ளையார் ஆலய நிர்வாகித்தினர் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு கருத்துகளையும் செவிமடுத்த நீதிமன்றம், ஏப்ரல் 12 ஆம் திகதி வரையிலும், அவ்விடத்தில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டு, வழக்கை அன்றையதினத்துக்கு ஒத்திவைத்தது.
இதேவேளை, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் பணிப்பாளரின் அறிக்கையை அன்றையதினம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் எஸ்.லெனின்குமார் கட்டளையிட்டார்.