பொலிஸாரின் எச்சரிக்கையையும் மீறி குழந்தைகளின் ஆபாச படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையதளங்களில் பார்த்தாலோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தால் குற்றம் எனவும் கைது செய்யப்படுவர் எனவும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
மேலும் இது தொடர்பான பட்டியல் தயார் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சமூகவலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
இவர் வட்ஸ்ஆப் மூலமாக குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக புகார் கூறப்படுகிறது. மேலும் பேஸ்புக் பக்கத்திலும் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாகவும் இதன் அடிப்படையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸாரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.