வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் சிங்கள தேசிய அமைப்பு முறைப்பாடுகள் செய்துள்ளது.
இலங்கை ஒரு பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் பாளி மொழியில் எழுதப்பட்ட புனைகதைகள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவது முற்றிலும் தவறான விடயம். பாலி மொழி மூலம் புனைகதைகளை உருவாக்கி பௌத்த தேரர்களால் சிங்கள சமூகத்திற்கு தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சிங்கள வரலாறுகள் முதல் பௌத்த தேரர்கள் வரை போலியான புனைகதைகளை கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எந்தவொரு சிங்கள பௌத்தரும் வசிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே சிங்கள தேசிய அமைப்பு இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அதேபோல இலங்கை எந்தவொரு விதத்திலும் சிங்களவர்களின் பூர்வீகம் அல்லவென்றும், இலங்கையின் பூர்வீக மக்கள் தமிழர்களே என்ற காரணத்தினால் இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சிங்கள தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தேசிய நல்லிணக்கதிற்கும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் செயற்படும் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யுமாறு தாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்வதாகவும் சிங்கள தேசிய அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.