எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நத்தார் பண்டிகைக் காலத்திற்கு அமைவாக கிறிஸ்தவ மக்கள் பெருமளவில் வாழும் பிரதேசங்கள் அடங்கலாக நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்பு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள்; வழங்கப்பட்டுள்ளதுடன் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக வழிபாட்டு தலங்கள், வர்த்தக கட்டட தொகுதி உள்ளிட்ட பொது மக்கள் பெருமளவில் நடமாடும் இடங்களை இலக்காக கொண்டு இந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முப்படையினரும், பொலிஸாரும் புலனாய்வு பிரிவுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவர்.
பண்டிகைக் காலப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கடந்த 2 வார காலம் முதல் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்தாகவும், இதற்காக தேவையான முப்படை மற்றும் பொலிஸாருக்கு மேலதிகமாக படையினரும் இணைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.