web log free
November 28, 2024

ரணவக்க விவகாரம் பூஜித்தவிடம் விசாரணைக்கு உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க விவகாரத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வாகன விபத்தொன்றினை அடுத்து, தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாரதியை மாற்றி, உண்மையை மறித்து சாட்சியங்களை சோடித்து  நீதித் துறைக்கு மோசடி செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்டு சம்பிக்க ரணவக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சிறையில் வைத்து அவரிடம் இவ்விசாரணைகளை முன்னெடுக்க  இவ்விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவின் அனுமதியை இன்று பெற்றுக்கொண்டனர்.

இவ் விவகாரம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக அது குறித்த மனு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் சார்பில் அதன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி  சில்வா,  பிரதான பொலிஸ் பரிசோதகர் பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இந் நிலையில் இவ்விவகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா மன்றுக்கு விடயங்களை முன்வைத்தார்.

2016 ஆம் ஆண்டு சந்தீப் சம்பத் என்ற இளைஞரை விபத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வழங்கிய வாக்குமூலத்திற்கமைய சில விடயங்கள் தெரியவந்துள்ளன.

அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த  , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் தொலைபேசி  சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசியுடன் சம்பவத்தையடுத்து தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த  வழக்கு விசாரணைகளை தொடர,   20 சிம்காடுகளுடன் தொடர்புடைய தொலைபேசிகளின் அறிக்கைகளை பெறவேண்டியுள்ளது. சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை அவரிடம் வாக்குமூலம் பெறவேண்டியுள்ளது. அதற்கான அனுமதியை வழங்கவும். ' என  பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd