புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைவிளக்க உரையை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி 3ஆம் திகதி, பாராளுமன்றம் கூட்டப்படும் போது, ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் கொள்கை விளக்க உரையை இல்லையேல் அக்கிராசன உரையை நிறைவேற்றிக்காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. ஆகையால், பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவரும் முயற்சியிலேயே ஜனாதிபதி கோத்தா ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை மாற்றமுடியாது. ஒரு மக்கள் ஆணையின் ஊடாக, இன்னொரு மக்கள் ஆணையை அடிபணிய செய்யமுடியாது. இது, அரசியலமைப்புக்கு முரணானது ஆகும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையும் சட்டவிரோதமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக முன்னின்று உழைத்தவர்களில், திஸ்ஸ அத்தநாயக்க பிரதானமானவர் ஆவார்.