web log free
May 09, 2025

100 கோடி ரூபா மோசடி- ரணிலுடன் மூவர் சிக்குவர்

இலங்கை மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கை வெளியிடப்பட்டதால் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடிகளுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதான பொறுப்பாளி என்பது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கொழும்பு அரசியல் சூடுபிடித்துள்ளது,

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பதனால், இந்த விவகாரம் பெரிதாக பேசப்படவில்லை. எனினும், அரசியல் ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் பிரதமர் உட்பட முன்னாள் அமைச்சர்களான கபிர் ஹாஷிம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் அந்த அறிக்கையில் பொறுப்பு கூறுபவர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் உள்ளகத் தகவல் கூறுகின்றது.

2015ஆம் ஆண்டில் 100 கோடி ரூபா பெறுமதியான பிணைமுறிகளை வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்திருந்தது.

ஆயினும் அப்போதைய பிரதமர் ரணில், அப்போதைய அமைச்சர்களான மலிக் மற்றும் கபிர் ஆகியோர் இணைந்து 1000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சாட்சியமளித்திருப்பதையும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் பெயர் மத்திய வங்கியின் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பிணைமுறி மோசடி இடம்பெற்ற காலகட்டத்தில் மத்திய வங்கியானது அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீழே இருந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd