web log free
November 29, 2024

3 மாணவிகளின் சடலங்களை கொண்டுவர ஏற்பாடு

அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்த 21, 23 மற்றும் 25வயதான இலங்கை மாணவிகள் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் பாடநெறியொன்றை கற்பதற்காக மூன்று மாணவிகளும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அங்கு சென்றுள்ளனர்.

மாணவிகள் தங்கிருந்த இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீயினால் வெளியேறிய விஷ வாயுவை சுவாசித்தமையால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மின் ஒழுக்கே தீ பரவியமைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன், இது குறித்து அந்நாட்டு பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடுவளை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளே இந்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பிலியந்தலை – போகுந்தர பகுதியைச் சேர்ந்த 23 வயதான மல்ஷா சந்தீபனி மற்றும் 21 வயதான தருனி அமாயா ஆகியோர் சகோதரிகளாவர்.

இந்த சம்பவத்தை அறிந்த மாணவிகளின் தந்தையின் சகோதரி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அஸர்பைஜானில் உயிரிழந்த 24 வயதான அமோத்யா மதுஹங்சி ஜயக்கொடி கடுவளை போமிரிய பகுதியைச் சேர்ந்தவராவார்.

உயிரிழந்த மாணவிகளின் பூதவுடல்களை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அஸர்பைஜான் அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

அஸர்பைஜானுக்கு இலங்கையில் தூதரகமொன்று இல்லை என்பதுடன், டெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் அந்த நாட்டுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd