ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய கையடக்க தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய சி.டிகளை பொலிஸாரிடம் ஒப்படைத்த முச்சக்கர வண்டியின் சாரதிக்கு சன்மானம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சாரதிக்கு 10 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கவுள்ளதாக இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டியின் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே சன்மான தொகை வழங்கப்படும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த சன்மானத்தை பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு தரப்பினர் முன்வரும் வாய்ப்புகள் உள்ள நிலையில், உண்மையான நபர் யார் என்பது பொலிஸாருக்கு மாத்திரம் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது பொருள் ஒன்றை ஒப்படைக்கும் நபர் தொடர்பான விடயங்களை பொலிஸார் பதிவு செய்து வைத்திருப்பார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், விரைவில் குறித்த சாரதி தொடர்பில் விவரங்களை வழங்கினால் சன்மானத்தை வழங்க தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2020 ஜனவரி மாதம் 02அம் திகதியன்று, பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டோ சாரதியொருவர், தனது முச்சக்கர வண்டியில், பயணி ஒருவரால் கைவிடப்பட்ட வன்தட்டு ஒன்று, (External Hard drive), மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தார்.
இந்த சி.டியை பரிசோதனை செய்த போது, ரஞ்சன் ராமநாயக்கவினுடையது என சந்தேகிக்கப்படும் அலைபேசியினூடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் பல அடங்கிய குரல் பதிவுகள், ஏராளமாகக் காணப்பட்டன.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹிருணிகா பிரேமசந்திர எம்.பி, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பத்மினி என்.ரணவக்க, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி தில்ருக்ஷி டயஸ், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சட்டத் துறையைச் சேர்ந்த நீதிபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட அலைபேசிக் கலந்துரையாடல்களும், அந்த வன்தட்டில் அடங்கியிருந்தன.
ரஞ்சன் ராமநாயக்க எம்.பி, மாதிவல பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.பி.க்களுக்கான வீட்டுத் தொகுதிக்குள், துப்பாக்கிச் சுடும் பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகேவைக் கொலை செய்வதற்காகவே, அவர் அவ்வாறு அந்தப் பயிற்சியை எடுக்கிறார் என்றும், அந்த வன்தட்டில், குரல் பதிவொன்று காணப்பட்டது.
இந்தப் பதிவை அடிப்படையாகக் கொண்டு, ரஞ்சனின் வீட்டைச் சோதனையிட்டு, கொலைக்கான முயற்சி ஏதும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்காக, மாதிவல எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள இலக்கம் 05 வீட்டைச் சோதனையிட, நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினூடாக அனுமதி கோரப்பட்டது.
இதற்கமைய, 2020.01.04ஆம் திகதியன்று, அந்த வீட்டைச் சோதனையிடுவதற்கு, மிரிஹானை பொலிஸாருக்கு அனுமதி கிடைக்கப்பெற்றது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதியைக் கொண்டு, ரஞ்சன் எம்.பியின் விருப்பத்துடன், குறித்த வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, ரஞ்சனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், வீட்டுப் பணியாளர்களும் காணப்பட்டனர். அத்துடன், அவர்கள் தரப்புச் சட்டத்தரணி ஒருவரும், அங்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.