web log free
November 29, 2024

சாஃபிக்கு வழக்கை பார்க்க அத்துரலிய தேரர் வந்தார்

வைத்தியர் மொஹமட் சாஃபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு குருணாகலை நீதவான் நீதிமன்றில் இன்று (16) அழைக்கப்பட்டது. சட்டவிரோதமாக பணம் ஈட்டியமை, பயங்கரவாதத்திற்கு உதவி புரிந்தமை மற்றும் கருத்தடை சிகிச்சை செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் சாஃபிக்கு எதிரான வழக்கு குருணாகலை நீதவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் வழக்கு தொடர்பான மேலதிக அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இதன்போது, குருணாகலை ஆதார வைத்தியசாலையின் 76 தாதியர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அவர்கள் அறிவித்தனர். அதேபோல், தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் வைத்தியர் சாஃபி பணி புரிந்த காலப்பகுதியில் சாஃபியின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளை முன்னோக்கி கொண்டு சென்று மீண்டும் ஒரு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் 02 மாதக் கால அவகாசம் பெற்றுத்தருமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் இதன்போது கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி, குறித்த வழக்கினை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அவரது வழக்கை பார்வையிடுவதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரும் நீதிமன்றத்துக்கு வருகைதந்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd