web log free
November 29, 2024

விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை மலர்கிறது

முன்னாள் போராளிகள் பலரின் ஒருங்கிணைவில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை என்ற அரசியல் கட்சியொன்று உதயமாகின்றது. 

இக்கட்சியின் முதலாவது அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இப்புதிய கட்சிக்கான நிர்வாகத் குழுவிற்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன. 

அண்மையில் வவுனியாவில் ஒன்று கூடியிருந்த முன்னாள் போராளிகள் அணிகளான ஜனநாயக போராளிகள் கட்சி, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போரளிகள் அணி, தமிழர் தாயகக் கட்சி, தமிழர் தேசியக் கட்சி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக சமூக செயற்பாடுகளில் பங்கேற்றிருந்த தரப்பினர், உள்ளிட்டவர்கள் சமகால சூழலில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து கலந்தாய்வுகளை மேற்கொண்டிருந்தனர். 

மாவீர்களின் உறவுகளையும், முன்னாள் போராளிகளையும், தாயக மக்களையும் மையமாக வைத்து அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த இணக்கப்பாட்டினை அடுத்து 14 பேர் கொண்ட தலைமைத்துவக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. 

இதன் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை வவுனியாவில் கூடிய தலைமைத்துவக்குழு அரசியல் கட்சிக்கான பெயர் தொடர்பில் ஆராய்ந்திருந்தது. முன்னாள் போராளிகள் பலர் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதம் உள்ளடங்கும் வகையிலேயே கட்சியின் பெயர் அமைய வேண்டும் என்பதில் அதீத விருப்பினை கொண்டிருந்தமையை முன்னிலைப்படுத்தி கட்சியின் பெயர் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

எனினும் விடுதலைப்புலிகள் என்ற சொற்பதத்தினை உள்ளீர்க்கும் பட்சத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான நகர்வுகளைச் செய்கின்றபோது சிக்கல்கள் உருவாகும் என்ற அடிப்படையில் ஒரு சிலர் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் “விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை” என்ற பெயர் உறுதி செய்யப்பட்டதோடு நிர்வாகத்தெரிவுக்காக இன்று மீண்டும் கூடுவதென தீர்மானிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஜனநாயகப்போராளிக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி கருத்து வெளியிடுகையில், ஒருதேசிய தலைமையினால் போரியலையும் சமதளத்தில் அரசியல் செல்நெறிப்போக்கினையும் சிறப்புற கொண்டு சென்றிட முடியுமானால் தற்போது தமிழ்த் தேசிய அரசியல் தளத்தில் இத்தனை தலைவர்கள் இருந்தும் ஏன் முடியாதுள்ளது. 

தமிழினம் தத்துவார்த்த தளமின்றி பயணிக்குமானால் எமக்குள் நாமே சிதைவுறுவோம் என்பதில் ஐயமில்லை. புலிகளை வசைபாடுவதையும், துதிபாடுவதையும் முன்னாள் போராளிகளாகிய நாம் வேண்டிக்கொள்ளவில்லை. அதற்கான எந்த தேவையும் எமக்கு இல்லை. மாவீரர்கள் யாருக்காக ஆகுதியாகினார்கள், நாம் எதற்காக ஆயுதத்தினை ஏந்தினோம் என்பதை சிந்தித்து ஒன்றிணைந்து மக்களுக்காக செயற்படுவதே தமிழ்த் தலைவர்கள் மற்றவர்களுக்குச் செய்யும் இதய சுத்தியான அஞ்சலியாகும். 

ஆனால் அவ்வாறான நிலைமைகள் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்னரான நிலைமையில் காணமுடிந்திருக்கவில்லை. அதன் காரணத்தினாலேயே கடந்த பத்து வருடங்களாக ஜனநாயக தளத்தில் பயணிக்க ஆரம்பித்த நாம் அரசியல் அங்கீகாரத்தினை நோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக கடலிடம் பொறுப்புக்கொடுக்கப்பட்டவை கேட்காமலேயே திரும்பி கொடுக்கப்படுவதே வழமையாகும். அந்த இயல்பு நந்திக்கடலுக்கும் பொருந்தும் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd