தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களை ஒட்டுமொத்த சர்வதேசமும் ஒருகனம் வியந்து பார்த்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முழு உலகத்திற்கும் தற்போது அச்சுறுத்தலாக உள்ள ஈராக், சிரியா போன்ற நாடுகளில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினாலும்கூட விமானம் மூலமான தாக்குதல்களை நடத்தமுடியாத நிலை இருக்கின்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட தாக்குதல்களினால் முழு உலகமும் வியந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே உலக நாடுகளுக்கு தற்கொலை அங்கி மற்றும் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் படகு என்பவற்றை அறிமுகப்படுத்தியவர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச புகழாரம் வெளியிட்டார்.
விமானப் படை அதிகாரிகள் இலங்கை விடுதலைப் புலிகள் அமைப்பின் திறமையை பாராட்டிய பிரதமர் மஹிந்த, விமான சேவையில் இணைவதற்கான பாடநெறி மற்றும் பயிற்சிகளை நிறைவுசெய்த 45 ஆண் சிப்பாய்கள் மற்றும் 10 பெண் சிப்பாய்கள் என 55 பேர் இன்றைய தினம் உத்தியோகபூர்வ நியமனம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு திருகோணமலை சீனத்துறைமுகத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்றது.
இலங்கை விமானப் படையில் விமானி பயிற்சிகளை நிறைவுசெய்தவர்களுக்கு இநத சந்தர்ப்பத்தில் பிரதமரால் இலட்சினை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கடந்த போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கை விமானப்படை உட்பட முப்படையினருக்கு வழங்கிய சவால்களை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள், அதியுயர் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலும்கூட தாழ்நிலையில் இரைச்சலின்றி பறந்து, தாக்குதல்களை நடத்தக்கூடிய அளவிலான சிறிய விமானங்களைப் பயன்படுத்தியிருந்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.
உலகத்திலுள்ள ஏனைய தீவிரவாத அமைப்புகளுக்கு இதுவொரு சிறந்த அறிமுகமாக விடுதலைப் புலிகளின் கண்டுபிடிப்புக்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக இலங்கை படையினருக்கு மிகுந்த சவால்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சர்வதேச நாடுகளின் விமானப்படை உட்பட படையினருக்கு கிடைத்திராத பல அனுபவங்கள் இலங்கைப் படைகளுக்குக் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.