ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பால், அவருடைய அரசியல் சிசியனான, தயாசிறி ஜயசேகர எம்.பி கடுமையான விரக்தியில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் தேர்தலில் குருநாகல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார் என, ஜி.எல்.பீரிஸ் அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், அடுத்த தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றுவிடவேண்டும். அதற்கான காய் நகர்த்தலை, தயாசிறி ஜயசேகர நகர்த்தியுள்ளார்.
அவ்வாறு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றால். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மிக இலகுவாக கைப்பற்றிக்கொள்ளலாம் என்பதே, தயாசிறியின் நோக்கமாக இருந்தது.
இதற்கிடையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்து, பொது சின்னத்தில் போட்டியிடவுள்ளது என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறுகின்றன.
மஹிந்தவும் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டால், தன்னுடைய கனவு கலைந்துவிடும் என்பதனால், தயாசிறி ஜயசேகர கடும் விரக்தியில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.