web log free
February 02, 2026

சஜித்துக்கு ரஞ்சித்: ரணிலுக்கு நவீன்- நாளைக்கு தெரியும்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (05) முற்பகல் குறித்த கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது, ஐக்கிய தேசியக்  கட்சி தலைமையிலான கூட்டணி தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலை இலக்கு வைத்து கட்டியெழுப்பவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெயரிட்டுள்ளார்.

எனினும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணியினரின் விருப்பத்துக்குரிய தெரிவாக நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்கவே உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த விடயம் தொடர்பில் நாளை (06) கூடவுள்ள கட்சியின் செயற்குழுவிலேயே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கட்சியின் தலைவர்கள் இன்று (05) கலந்துரையாடவுள்ளதுடன், எந்தவிதமான தீர்மானத்துக்கு வருவது என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவிக்கு ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க செயற்குழு இணங்காவிட்டால், அங்கு பிரச்சினைக்குரிய நிலையொன்றும் தோன்றலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Tuesday, 11 February 2020 05:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd