இந்தியாவின் ராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கவே முடியாது என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மீண்டும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 4 நாட்கள் பயணமாக வருகை தந்துள்ளார் மகிந்த ராஜபக்சே. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை மகிந்த ராஜபக்சே சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சாரநாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும் மகிந்த ராஜபக்சே பயணம் மேற்கொள்கிறார். இந்திய பயணம் தொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டுக்கு மகிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
யுத்தத்துக்கு உதவி
நாங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். ஆகையால் இந்தியா, பாகிஸ்தானுடன் இதுதொடர்பாக விவாதிக்கிறோம். இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கையின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவி உள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் பாகிஸ்தான் அளித்தது. இந்தியாவும் கூட இலங்கைக்கு உதவி செய்தது. ஆனால் அதை நாங்கள் பகிரங்கப்படுத்தவில்லை.
இந்தியா இல்லையெனில் வெற்றி இல்லை
இவ்வளவு ஏன்? இந்தியாவின் உதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கவில்லை. இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா முன்னரே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அப்போது இலங்கையில் இருந்த அரசு இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இந்தியாவின் உள்விவகாரங்களில் ஒருபோதும் தலையிடமாட்டோம்.
இந்தியா உறவினர் தேசம்
எங்களுடன்நட்பாக இருக்கும் நாடுகளுக்கு ஒவ்வொரு பார்வை இருக்கலாம். ஆனால் இந்திய விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்கள் நிலைப்பாடு. ஏனெனில் இந்தியா எங்களது உறவு நாடு; மற்றவை நட்பு நாடுகள். இதைநான் பல முறை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன். யுத்தத்தால் இலங்கை மிக மோசமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது.
அதிகாரப் பகிர்வு
ஆகையால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. இதற்கு சீனா உதவ முன்வரும் போது அதை நாங்கள் தவிர்க்க முடியாது. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நாங்கள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முயற்சிக்கிறோம்.இதற்காகவே நிதியையும் ஒதுக்கி இருக்கிறோம். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போன்ற தமிழர் அரசியல் கட்சிகள் வளர்ச்சியை விரும்பவில்லை. அதிகாரப் பகிர்வு; இனப்பிரச்சனைக்கு தீர்வு என்றே அவர்கள் பேசி வருகின்றனர். இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.