மாலியில், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவத்தினரை விலக்கிக் கொள்வது குறித்து எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
மாலியின் மத்திய பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை காலை, இலங்கை இராணுவ அணி ஒன்று கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில், இரண்டு இலங்கை படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 6 படையினர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட கப்டன் தர அதிகாரி மேஜராகவும், கோப்ரல் தர அதிகாரி சார்ஜன்ட்டாகவும் நேற்று பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை இராணுவ அணி தாக்குதலுக்குள்ளாகிய போதிலும், மாலியில் தொடர்ந்தும் தமது படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.