web log free
July 01, 2025

கொரோனா நோயாளி சுட்டுக்கொலை

உலக சுகாதார ஸ்தாபனத்தால் COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம், முழு வீச்சில் சீனாவை தாக்கி வரும் நிலையில், குறித்த வைரஸ் பரவலைத் தடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் தவித்துப் போயிருக்கின்றது சீன மக்கள் குடியரசு.

சீனாவைப் பொறுத்தவரைக்கும் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் ஆனது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மாகாணமாக ஹூபே பதிவாகியுள்ளது. தற்போது வரைக்கும் சீனாவில் 1489 பேர் உயிரிழந்ததோடு, 64 ஆயிரத்து 241 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது இப்படியிருக்க , சீனா தவிர்ந்த மேலும் 25 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்றும், தமது நாடுகளில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முழு முயற்சிகளிலும் இறங்கியிருக்கின்றன.

இது இப்படியிருக்க, சீனாவின் நேச நாடான வடகொரியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என்று சந்தேகிக்கப்படுபவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

தற்போது வரை ஒரே ஒருவர் மட்டுமே அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாகவே சுட்டுக்கொல்லுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் உத்தரவிட்ட நிலையில், உடனடியாகவே குறித்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பற்றி சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கையில், வடகொரிய வர்த்தகத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் அண்மையில் சீனாவுக்குச் சென்று மீண்டும் வடகொரியா திரும்பிய நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த வடகொரிய அதிகாரிகள் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதுடன் தீவிர கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்தார்.

இருந்தும், அரச உத்தரவை மீறிய அவர் பொது இடத்தில் உள்ள குளியலறைக்கு சென்ற காரணத்தினால் வடகொரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக வடகொரிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

இதேநேரம் சீனாவிலும் நோய்தாக்குதலுக்குள்ளான பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நோய் தொற்றுத்தொடர்பாக முதன்முறையாக தகவல் வெளியிட்ட ஊடகவியலாளர் சீனாவில் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd