web log free
November 25, 2024

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை தருமாறு வலியுறுத்தி, கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் 700 ரூபாய் அடிப்படை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், இன்று அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.

700 ரூபாய்அடிப்படை சம்பளத்துடன், இந்த கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு தொழிற் சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் இன்று முற்பகல் நடவடிக்கை எடுத்திருந்தன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன இணைந்து முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளன.

எனினும், இந்த கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதிலிருந்து தாம் விலகுவதாக கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வரைவில், வரவுக்கான கொடுப்பனவு மற்றும் உற்பத்தி கொடுப்பனவு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன், ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், அதன் பிரதிநிதி ஒருவரினால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

அடிப்படை வேதனம் 700 ரூபாய்க்கு மேலதிகமாக, விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவையும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை உள்ளடக்கி  105 ரூபாவையும், மேலதிக கொளுந்து கிலோகிராம் ஒன்றுக்காக 40 ரூபாயை வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், 700 ரூபாய் அடிப்படை ஊதியத்துடன், கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

சிவில் அமைப்புகளின் ஒன்றியமான ஆயிரம் இயக்கம் இது தொடர்பான தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன், முதலாளிமார் சம்மேளனமும், தொழிற்சங்கங்களும் இணைந்து கூட்டு ஒப்பந்தத்தில்  கைச்சாத்திடுவதற்கு எதிராக இன்றைய கொழும்பிலும், மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd