போதைபொருள் கடத்தலில் ஈடுபடும் பிரபல போதைப்பொருள் வியாபாரி என்று கூறப்படும் குடு சித்திக் என்று அழைக்கப்படும் மொஹமட் சித்திக் என்பவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்டு 52 கோடி ரூபாய் அளவில் பணத்தினை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மூன்றரை வருடங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
10 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியாக இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொஹமட் சித்திக் வெளிநாட்டுக்கு பயணிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மொஹமட் சித்திக்கின் பிணையாளர்களில் ஒருவர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என, உத்தரவிட்ட நீதிபதி, மாதம் இரண்டு தடவை குற்றப்புலானாய்வு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மொஹமட் சித்திக் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த நீதிபதி, நிதிச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு மூன்றரை வருடங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மொஹமட் சித்திக்கை நிபந்தனை பிணையில் விடுவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2014ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்டு 52 கோடி ரூபாய் அளவில் பணத்தினை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குடு சித்திக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.