தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ரவிராஜின் மனைவியால் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கை விசாரித்த, கொழும்பு மேல் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட ஆறு எதிரிகளையும் விடுதலை செய்திருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ரவிராஜின், மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வேங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போது, குறித்த மனுவில் இரண்டாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த கடற்படையின் முன்னாள் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி, சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் தனது சார்பில் வாதிடுவதற்கு சட்டத்தரணியை ஏற்பாடு செய்வதற்காக இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.