இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் பூரண குணமடைந்த நிலையில், அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், பூரண குணமடைந்து வெளியேறிய இரண்டாவது நபராக இவர் பதிவாகியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பெண்ணொருவர் இந்த தொற்றுக்கு முதலாவதாக கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி பாதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த சீன பிரஜை அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் பூரண குணமடைந்த கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி முதல் முறையாக நாட்டில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இத்தாலியிலிருந்து வருகைத் தந்த அந்தநாட்டு பிரஜைகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றிய 52 வயதான ஒருவருக்கே முதல் தடவையாக இந்த தொற்று ஏற்பட்டிருந்தது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அத்துடன், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, குறித்த சுற்றுலா வழிகாட்டியுடன் இருந்த மற்றுமொரு சுற்றுலா வழிகாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
இதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை இன்று மாலை வரை 91 வரை அதிகரித்திருந்தது.
கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 227 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் பூரண குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு குணமடைந்தவர்களில் ஒரு வெளிநாட்டு பிரஜையும், ஒரு இலங்கையரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.
எனினும், கொரோனா தொற்றுக்குள்ளான இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் ஐ.டி.எச் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்