பேரம் பேசும் அரசியல்வாதிகளை நம்பவேண்டாமென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றிலும் அரசியல் மேடைகளிலும் ஒருவரையொருவர் மிக மோசமாக திட்டித் தீர்த்துக்கொண்டு, சில வேளைகளில் கைகலப்புக்களிலும் ஈடுபடும் பெரும்பாலான அரசியல்வாதிகள், திரைமறைவில் தங்களுக்கிடையே மிக நெருக்கமான உறவுகளைப் பேணிவரும் வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல்வாதிகளுக்காக அடித்துக்கொள்வதை வாக்காளர்களும், அரசியல்கட்சிகளின் ஆதரவாளர்களும் கைவிட்டு, ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“அரசியல் கட்சிகள் என்றால் தனித்துவமாக இருக்க வேண்டும். கலவை ஆகிவிடக் கூடாது. காலையில் நாடாளுமன்றத்தில் பொய்யாக சண்டையிட்டு கொண்டு, மாலையில் ரகர் விளையாடி பின்னர் விருந்துக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை மீண்டும் பொய்யாக அடித்துக்கொள்ளும் டீல் நடவடிக்கையாக அமைய கூடாது.
“நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்மை கைதுசெய்யக் கூடாது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை கைதுசெய்ய மாட்டோம் என்பதுதான் டீல் அரசியல். இதனை 1 கோடியே 60 இலட்சம் வாக்காளர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
“தேர்தலின் பின்னர் வீடுகளுக்கு தீவைக்க வேண்டாம். மோதிக் கொள்ள வேண்டாம். கொலை செய்ய வேண்டாம். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள வேண்டாம். அரசியல் மேடைகளுக்கு தீவைக்க வேண்டாம். கை, கால்களை உடைத்துக்கொள்ள வேண்டாம்.
“உங்களுடைய தலைவர்கள் என நீங்கள் கொண்டாடும் அனைவரும் அவர்களுக்கிடையே நண்பர்கள். உங்கள் முன்னாள் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் உங்கள் அரசியல் தலைவர்கள் தமக்குள் மிக நெருக்கத்துடனேயே உள்ளனர். அவர்களுக்காக உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.