யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை தொடர்பிலான வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இராணுவத்தின் சிறப்பு படையணியைச் சேர்நத சுனில் ரத்னாயக்க, ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பில் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த 5 வருடங்களாக தண்டனை அனுபவித்து வந்தார்.
வெலிகடை சிறையிலிருந்து இன்று(26) காலை 9.30க்கு சுனில் ரத்னாயக்க, வெளியேறி சென்றுவிட்டார் என்றும், அந்த சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்றவர்) கமல் குணரத்னவும் பிரசன்னமாய் இருந்தார் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.
பின்னணி
2000 டிசம்பர் 19 அன்று மிருசுவிலில் தமது வீடுகளை பார்வையிட சென்ற பொதுமக்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இதில் தப்பியோடி வந்த ஒருவர், வழங்கிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் 14 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.
சாவகச்சேரி நீதிமன்றதால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கு பின்னர் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் விசாரிக்கப்பட்டது.
5 இராணுவச்சிப்பாய்கள் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2015 யூன் 25 அன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. ஏனைய நான்கு சிப்பாய்களையும் போதிய ஆதாரமில்லையென்பதால் விடுதலை செய்தது.
இந்த நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.