ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனை கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப்பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
" தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்.
12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.
அதன்பின்னர் திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு 16, 17 ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.
கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளை பகுதி போதகர், தேவாலயம் வந்துள்ளார். அதன் பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பை பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.