web log free
September 16, 2024

இலங்கையில் இரண்டாவது நபர் மரணம்

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில், கொழும்பு - ஐடீஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களில் ஒருவர், இன்று (30) மாலை, உயிரிழந்துள்ளார்.

அந்த வகையில், கொரோனா வைரஸ் தொற்றால், இலங்கையில் இரண்டாவது மரணம், இன்று சம்பவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஐடீஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட, 65 வயதுடைய மொஹமட் ஜமால் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று, சுகாதார அமைச்சு தெரிவித்தது.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்ற நீர்கொழும்பு - போரதொட்ட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், நெஞ்சுவலி என்று கூறிக்கொண்டு, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு, சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.

இதன்போது அவர், குறித்த வைத்தியசாலையின் 4ஆம் இலக்க வாட்டில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நோயாளரின் நோய் அறிகுறிகள் குறித்து ஆராய்ந்த போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதன்படி, இன்று மாலை 3 மணியளவில், அங்கொடையிலுள்ள ஐடீஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அதன்போதே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து, குறித்த நபரின் உறவினர்கள், வீடுகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 

Last modified on Monday, 30 March 2020 13:35