இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி, இறந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரேநேரத்தில் 10 ஆடுகள் இறந்தமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் ஒருவகையான பதற்றமும் நிலவுகிறது.
மொணராகலை – அலியாவத்தை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலியாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த 11 ஆடுகளில், 10 ஆடுகள் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் இறந்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து ஆடுகளும் மயக்கமடைந்து வீழ்ந்த போது, மிருக வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய மருந்துகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து, வழமை நிலைமைக்கு திரும்பிய ஆடுகளில் 10 ஆடுகள் இன்று காலை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எஞ்சிய ஒரு ஆட்டிற்கு மிருக வைத்திய அதிகாரிகள் சிகிச்சைகளை அளித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இறந்த ஆடுகள் மீதான பிரேத பரிசோதனைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
கொரோனா வைரஸ் மிருகங்களுக்கு பரவி வருகின்ற நிலையில், குறித்த ஆடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்குமா என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் உள்ளதாக அங்குள்ள செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த ஆடுகள் இறந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனைகளின் பின்னர் இறப்புக்கான காரணத்தை அறிவிக்க முடியும் என மிருக வைத்திய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான சம்பவமொன்று உள்ளமையை மொனராகலை பொலிஸார் உறுதிப்படுத்தியதுடன், சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டனர்.
மிருக வைத்திய அதிகாரிகளின் விசாரணை அறிக்கையை அடிப்படையாக வைத்தே தமக்கு காரணத்தை கூற முடியும் என பொலிஸார் கூறுகின்றனர்.
மக்கள் மத்தியில் போலி தகவல்கள் பரவி வருவதாகவும், மக்களை அச்சப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.