ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தற்போது இருக்கும் நிதி அதிகாரம் எதிர்வரும் 30ம் திகதிக்கு பின்னர் இருக்காது என்பதனாலேயே அந்த அதிகாரத்தை பயன்படுத்த நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க சட்டம், நீதி மற்றும் நிறைவேற்று அதிகாரங்கள் முறையே இயங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மார்ச் 2ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமையினால் ஜூன் மாதம் முதல்வாரத்தில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும். ஆனால் தற்போது காணப்படும் கொரோனா நெருக்கடி நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்பதனால் அது தொடர்பாகவும் சிறந்த தீர்மானத்தை பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்த்தை கூட்ட வேண்டும் என கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தாலும் அரசியலமைப்பின் 70- 7 பிரிவின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும் என சுட்டிக்காட்டிய சுமந்திரன் இதனை செய்வதற்கு அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவ்வாறு நாடாளுமன்றத்தை கூட்டினால் ஜூன் மாதம் 2 ம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்தி நாடாளுமன்றத்த்தை கூட்ட வேண்டும் என்ற தேவை ஏற்படாது எனவும் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.