கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமாயின், அதற்கு “பஞ்சாயுத” முறைமையைக் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள வைத்தியர்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதென்பது, இந்த ஐந்து முறைமைகளில் முக்கியமானதென்று வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சாயுதம்
1. வீட்டுக்குள்ளே இருப்பது
2.வீட்டுக்கு வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிதல்,
3.முகத்தைத் தொடுவதிலிருந்து தவிர்த்தல்,
4.ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுதல்,
5.கைகளை நன்றாகக் கழுவுதல் போன்றவையே, இந்த பஞ்சாயுத முறைமையாகும்
நாட்டுக்குள் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விசேட வைத்திய நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டமொன்று, ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, வைத்தியர்கள் மேற்படி கூறினர்.
இதன்போது தொடர்ந்துரைத்துள்ள வைத்தியர்கள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தனி நபர்களால், கொவிட்-19 தொடர்பில் பல்வேறு கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அந்தக் கண்டுபிடிப்புகளைச் செயற்படுத்திப் பார்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
நீரிழிவு, மூச்சுத் திணறல் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள், இந்தக் கொரோனா வைரஸிடமிருந்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்துகளை, அவர்கள் உரிய முறையில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ள வைத்தியர்கள், அதேபோன்று புகைப்பழக்கத்தைக் கைவிட வேண்டுமென்றும் அனைவரும் தங்களுடைய தொண்டைப் பகுதியை, எப்போதும் ஈரழிப்பாக வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.
இந்த அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் சின்னம் பஞ்சாயுதம் என்பது குறிப்பிடத்தக்கது.