ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்ட பொதுத்தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உரிய தெளிவுப்படுத்தலை வழங்க வேண்டும் இதற்கான ஆலோசனையை ஆணைக்குழுவிடம் இவ்வாரம் பெறவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் இடம்பெற வேண்டிய திகதி, புதிய பாராளுமன்றத்தை கூட்டும் திகதி ஆகியவற்றுக்கு ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தில் சட்டவியாக்கியானம் கோர வேண்டிய அவசியம் கிடையாது என்பது தற்போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தல் மே மாதம் இறுதி வாரம் இடம்பெறுமாக இருந்தால் ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு செல்லுபடியாகுமா, இல்லையா, என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும் கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உரிய தெளிவுப்படுத்தலை வழங்கவுள்ளோம். இவ்வாரம் ஆணைக்குழுவில் இதற்கான தெளிவுப்படுத்தலை கோரவுள்ளோம்.
பொதுத்தேர்தலை நடத்தும் திகதியை அறிவிக்கும் பொறுப்பு ஆணைக்குழுவிடம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதிகளவான உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள். தேசிய பட்டியலில் மூன்று இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் துறைசார் நிபுணர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.