கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்படாத 12 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னர் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அறியமுடிகிறது. அதுதொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்திவருகதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார பிரிவுகளின் பரிந்துரைகளுக்கு அமையவே, இவ்வாறு ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
ஹம்பாந்துாட்ட, மொனராகல, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, முல்லைத்தீவு,வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலலேயே புத்தாண்டுக்குப் பின்னர், ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு கலந்தாலோசிக்கப்படுகிறது.
அந்த 12 மாவட்டங்களுக்கு மேலதிகமாக கம்பஹா மாவட்டத்தில் பியகம பிரதேச செயலார் பிரிவு, கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க மற்றும் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
கடுமையான கண்காணிப்பு வலயமாக இனங்காணப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாத்தறை, பதுளை, மட்டக்களப்பு, காலி, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தை அமுலில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், சுகாதார பிரிவுகளின் பரிந்துரைகளை அடுத்தே, ஊரடங்கு சட்டம் தளர்த்துவது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும்.