உயிரிழந்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குகின்ற நிலையில், முஸ்லிம்கள் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய தகனம் செய்வது கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருந்தனர்.இந்நிலையிலேயே இலங்கை அரசாங்கத்தால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
203 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், அவர்களில் 56 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், 140 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதேவேளை, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 154 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழந்த 7 பேரின் சடலங்களும் தகனம் செய்யப்பட்டன.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களில் முஸ்லிம்களும் அடங்குகின்ற நிலையில், முஸ்லிம்கள் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய தகனம் செய்வது கூடாது என அரசாங்கத்தை வலியுறுத்தி வந்திருந்தனர்.
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் மாற்றப்படவில்லை.
கொரோனா தொற்று ஏற்பட்டு மரணமடையும் ஒருவரின் சடலத்தை தகனம் செய்வதே சிறந்தது என்ற நிலைப்பாட்டில் சுகாதார பிரிவினர் இருந்ததை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாகளை தகனம் செய்யக்கூடாது என வலியுறுத்தி வந்த நிலையிலேயே சுகாதார அமைச்சு இந்த விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.