கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தற்போது நீடித்துவரும் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பது என கடந்த 11ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 ஆகியவற்றின் படி தற்போதுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படும் காரணத்தால் மே மாதத்திற்கென நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் தரப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டடத் தொழிலாளர் உட்பட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கென 15 கிலோ அரசி, பருப்பு, சமையல் எண்ணை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
ஊரடங்கிற்கென ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடருமென்றும் முதலமைச்சரின் அறிவிப்பு கூறுகிறது.