2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில், சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் நெருக்கிய தொடர்பை பேணியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் , முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீனின் சகோதரர், புத்தளத்தில் வைத்து, நேற்று (14) கைதுசெய்யப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டவர்களில் 119 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரில் தடுப்பு காவலிலும் 78 பேர், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் தடுப்பின் கீழும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.