பொது சுகாதார கண்காணிப்பாளராக PHI தன்னை அறிமுகப்படுத்திகொண்டு, சுய தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று, ஆலோசனைகளை வழங்கியவர், நேற்று (17) கைது செ்யப்பட்டுள்ளார்.
வதுரம்ப பொலிஸ் பிரிவிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 35 வயதான இவர், பொத்தல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த நபர், வதுரம்ப பொலிஸ் பிரிவில், சுய தனிமைப்படுத்தல் வீடொன்றுக்கும் பொத்தல பிரதேசத்தில், சுய தனிமைப்படுத்தப்பட்ட நான்கு வீடுகளுக்கும் சென்றிருக்கின்றமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது,
அவர், அம்பலாங்கொட பொல்வத்த பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இணைக்கப்பட்ட சேவையில் இருந்துள்ளார். அத்துடன் அங்கு புகைவிசுறும் பணியை செய்துள்ளார்.
சந்தேகநபர், தனிமையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணொருவரின் வீட்டுக்கு சென்று, தன்னை பொது சுகாதார கண்காணிப்பாளர் என அறிமுகப்படுத்திகொண்டு, அந்த பெண்ணின் கையடக்க தொலைபேசி இலக்கத்தை பெற்றுசென்றுள்ளார். அத்துடன், அப்பெண்ணின் தேசிய அடையாள அட்டையையும் தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துகொண்டு சென்றுள்ளார்.
அத்துடன், அப்பிரதேசத்துக்கு பொறுப்பான கிராமசேகவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த அந்த நபர், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நபரை தேடி கண்டறியமுடியாமை தொடர்பில், கடுமையான எச்சரிக்கையையும் கிராமசேகவருக்கு வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.