உப குடும்பங்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அறிக்கை ஒன்றினூடாக அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளது.
பிரதான குடும்பத்துடன் ஒன்றிணைந்து வசிக்கும் உப குடும்பங்கள், தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களின் குடும்பங்கள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறையை சேர்ந்தவர்கள், உத்தேச அல்லது தற்காலிக சம்பளம் பெறும் குடும்பங்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
மாதாந்தம் 5000 ரூபாவிற்கும் குறைந்த ஓய்வூதியத்தை பெறுபவர்களுக்கும் 5000 ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் தங்களின் மேன்முறையீடுகளை கிராம மட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள குழுக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
நாளைய தினத்திற்குள் 5000 ரூபா வழங்கும் செயற்பாடுகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.