ராஜபக்சக்களுக்கு இடையில் அதிகார மோதல் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தினருக்கு இடையிலான அதிகார மோதலின் பிடியில் கொரோனாவிற்கு எதிராக போராட்டம் சிக்கித் தவிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு என்ற போர்வையில் நாடாளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்ய தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மறுபுறத்தில் மக்களின் உயிர்களைப் பற்றியும் கவலை கொள்ளாது எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்தி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் மஹிந்த ராஜபக்ச தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் ஜனநாயகம் மிகவும் முக்கியமானது என்ற போதிலும் அதனை விடவும் மக்களின் பாதுகாப்பு அதனை விடவும் முதன்மையானது என மங்கள தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.