கொழும்பில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பது, தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்று, அரசாங்கம் நேற்று (23) அறிவித்ததாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நோய் தொற்று நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இப்போது இவர்களை தம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது உசிதமானதல்ல என்று அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, தன்னிடம் தெரிவித்தாரெனவும் இந்த முடிவின் அடிப்படையைத் தானும் ஏற்றுக்கொள்வதாக தான் அவருக்குக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“20ஆம் திகதிக்கு பிறகு இவர்களை சொந்தவூருக்கு அனுப்பி வைக்க, ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு நீடிக்கப்பட்டதால், இது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், கொழும்பில் நிரந்தர பதிவு இல்லாத இவர்களுக்கு உணவு தேவைகளுக்கான வாழ்வாதார உதவிகளை அரசு வழங்க வேண்டும் என கேட்டிருந்தேன். இது பற்றியும் கூட்டத்தில் தான் கலந்துரையாடியுள்ளதாக அவர் எனக்குக் கூறினார்.
“கிராம சேவகர்கள் தற்போது கொழும்பின் நிரந்தர வதிவாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதில் குழம்பி போயுள்ளனர். எனவே, இந்த வெளிமாவட்ட பிரிவினர் ஏற்கெனவே பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்துள்ளதால், இவர்களுக்கு பொலிஸ் மூலமாக வாழ்வாதார கொடுப்பனவுகளை வழங்கும்படி நான் அவருக்கு ஆலோசனை கூறினேன். இதை ஏற்றுகொண்ட அவர் இதுபற்றி நாளை பதில் கூறுவதாக தெரிவித்தார்” என்று, மனோ கணேசன் மேலும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.