web log free
January 03, 2025

நிலைமை மிக மோசம்! தேர்தல் முக்கியமல்ல - மஹிந்த

கொரோனா வைரஸால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல. கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. உயிரிழப்புகள் 7 மட்டும்தான் பதிவாகியுள்ளன. ஆனால், கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தக் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதாரப் பிரிவினர், மருத்துவத்துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் முழுமூச்சுடன் போராடி வருகின்றனர். இந்தநிலையில், எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல.

கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம். எனினும், வெகுவிரைவில் நிலைமை சரி வந்தால் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கக்கூடும். நாம் எந்த வேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அதில் வெற்றி பெறுவதிலும் உறுதியாக இருக்கின்றோம்.

நாடாளுமன்ற சட்டத்தை - நாட்டின் அரசமைப்பை மதித்து திகதி குறிப்பிட்டு தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்துள்ளது. அது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd