கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது..
அமைச்சின் மேலதிக செயலாளர் (சுகாதார சேவைகள்) டாக்டர் சுனில் டி அல்விஸ் கையெழுத்துடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.. இதனை விசாரித்தபோது அத்தகைய கடிதம் அனுப்பப்பட்டதாக மேலதிக செயலாளர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் இலங்கையில் கோவிட் -19 அச்சுறுத்தல் தீவிரமாக இல்லை என்றும் செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கைக்கமைய இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
தேவைப்பட்டால் பயன்படுத்த நாட்டில் பாதுகாப்பான உறைகள் இல்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னர் வலியுறுத்திய பின்னர், இதுபோன்ற 1,000 உறைகளை வழங்க முடியுமென செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இருப்பினும், செஞ்சிலுவைச் சங்க நிர்வாக நடைமுறைகளின்படி எழுத்துமூலம் கோரிக்கை விடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கொரோனாவால் தகனம் செய்யப்படும் உடல்களுக்கு மாத்திரமன்றி மீண்டும் தோண்டக்கூடிய சந்தேகம் உள்ள சடலங்களை அடக்கம் செய்யவும் இவை பயன்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.