பாதாள உலக குழு தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஸ் என அழைக்கப்படும் மதூஸ் லக்ஷித்த உள்ளிட்டவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்கள் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஸ் டுபாயிலுள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவருடன் நான்கு பாதாள உலக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களில் இலங்கை பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பாதாள உலக குழு உறுப்பினர்களான கெசல்வத்தே தினுக, கஞ்ஜிபானி இம்ரான், ரனாலே சூட்டா மற்றும் அங்கொட சுத்தா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.