கண்டி மாவட்டத்தில் அக்குறணை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை ஆகிய பிரதேசங்களை திறந்துவிட்ட அரசாங்கம், மருதானையையும் இன்று(03) திறந்துவிட்டது.
மருதானை, இமாமுல்- அருஸ் மாவத்தை ஆகியவற்றுக்குள் உள்நுழைவதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது.
இந்த பிரதேசம், ஏப்ரல் 2ஆம் திகதி முதல் இன்று (03) வரையிலும் மூடப்பட்டிருந்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பிரதேசத்தை சேர்ந்த நபர் மரணமடைந்தார். அவரது மரணம் இலங்கையில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாகும். அதனையடுத்து அப்பிரதேசம் கடும் அபாய வலயமாக பிறகடனப்படுத்தப்பட்டு, அப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்த வீட்டுத் தொகுதியில் இருந்த 302 பேரும், புணானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதனையடுத்து, அவர்கள் அனைவரும் கடந்த 17ஆம் திகதியன்று வீடுகளுக்கு திரும்பினர்.
அத்துடன் மேலும் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். 14 நாட்களுக்குப் பின்னர், இன்றையதினம் திறந்து விடுக்கப்பட்டது.
இதேவேளை, அங்கு இன்னும் 500 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.