உயிர்த்த ஞாயிறுத் தாக்கல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமினின் முக்கிய சகாவும் வலது கையுமாக செயற்பட்டவர் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முந்தல் பிரதேசத்தில் முன்னெடுத்துசெல்லப்பட்ட ஆயுதப்பயிற்சி மத்திய நிலையத்தையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர்கள் சிலருக்கு ஆயுதப்பயிற்சி மற்றும் பிரிவினைவாத சிந்தனைகளை கற்பித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழே, சஹ்ரானின் சகா கைதுசெய்யப்பட்டார்.
சஹ்ரானின் ஆலோசனையின் பேரிலேயே இந்த செயற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கற்பிட்டி நான்காவது குறுக்கு வீதியை வசிப்பிடமாகக் கொண்டவர். அவரை, அரசசார்பற்ற நிறுவனத்தின் கட்டிடத்துக்கு நேற்றிரவே குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துச் சென்றனர்.
அந்த இடத்திலிருந்து முக்கிய ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சரின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை குற்றப்புலான்வு பிரிவினர் முன்னெடுத்துவருகின்றனர். அத்துடன் சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிடுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.