web log free
January 10, 2025

கோபால் பாக்லே பற்றிய ஒரு பார்வை

காணொளி மாநாட்டின் மூலமாக ஜனாதிபதி கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் நியமன சான்றிதழை இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே  சமர்ப்பித்தார். 

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்கள் இன்று  காணொளி மாநாட்டின் (Video Conference) ஊடாக நடைபெற்ற நிகழ்வொன்றில் தனது நியமன சான்றிதழை ஜனாதிபதி கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் சமர்ப்பித்தார்

2. இந்த பாரம்பரிய நிகழ்வினை ஒரு புத்தாக்க முயற்சியின் அடிப்படையில் ஏற்பாடு செய்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த உயர் ஸ்தானிகர்,
கொவிட்-19 நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியுமென்பதை இலங்கை மற்றும் இந்திய தலைமைத்துவங்களால் மிகவும் ஆழமாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் இன்றைய இந்த சிறந்த முயற்சியானது இருநாடுகளும் தமது நட்பு மற்றும் பன்முக
உறவுகளின் அடிப்படையில் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தினையும், பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும் சுட்டிக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


3. ஜனாதிபதி கௌரவ கோத்தாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இந்திய தலைமைத்துவத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களை
உயர் ஸ்தானிகர் அவர்கள் தெரிவித்திருந்ததுடன், இலங்கையுடனான இந்திய உறவுகளில் காணப்படும் அதீத முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டும் வகையில், இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் அபிவிருத்தி செய்வதிலும் வலுவாக்குவதிலும் இந்தியாவில் காணப்படும் அதி உயர் மட்ட ஈடுபாட்டையும் அவர் வலியுறுத்திக்
கூறியிருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த மரபினை சுட்டிக்காட்டும் வகையில் கௌரவ உயர் ஸ்தானிகர் அவர்கள், அஸ்கிரிய
பீடத்தின் வணக்கத்துக்குரிய மகாநாயக்க தேரர் அவர்களுக்கும் மல்வத்தை பீடத்தின் வணக்கத்துக்குரிய அனுநாயக்க தேரர் அவர்களுக்கும் மேற்கொண்டிருந்த காணொளி அழைப்பின் மூலமாக இரு நாட்டு மக்களினதும் சமாதானம் மற்றும் செழுமைக்காக புத்த பெருமானை வழிபட்டிருந்தார்.

4. தற்பொழுது காணப்படும் கொவிட்-19 நெருக்கடி நிலையின்போதும் ஏனைய இயற்கை அனர்த்தங்களின்போதும் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைகளில் முதலில் ஆதரவு வழங்கும் அயல்நாடாக இந்தியா இருப்பதனை உயர் ஸ்தானிகர் இங்கு நினைவூட்டியிருந்தார்.

இந்த விடயத்தில் இந்திய மக்களின் ஆதரவினை வெளிக்காட்டும் வகையில் கடந்த சில வாரங்களுக்குள் 25 தொன்களுக்கும் அதிகமான நிறையுடைய உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் நான்கு தொகுதிகளாக இந்தியாவால் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அதற்கு மேலதிகமாக கொவிட் 19 நெருக்கடியை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக இந்தியாவிலுள்ள பிரபலமான சுகாதார நிறுவனங்கள் ஏற்பாடு செய்த பல்வேறு இணையவழி பயிற்சி பட்டறைகளில் இலங்கையைச் சேர்ந்த
சுகாதாரத்துறை நிபுணர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட்-19க்கு எதிராக கூட்டாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்தும் வகையில், பொருளாதார மீட்சி
உள்ளிட்ட பல விடயங்களில் சகல சாத்தியமான வழிகளிலும் இலங்கையில் இந்தியாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தார்.

5. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டாவது பதவிக் காலத்தினை ஆரம்பித்தபோது மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணத்தில் கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் விஜயம் ஒன்றையும் இலங்கைக்கு மேற்கொண்டிருந்தார்.

2019 நவம்பரில் கௌரவ ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களால் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இந்தியாவுக்கு மேற்கொள்ளப்பட்டமை இருதரப்பு உறவில் மிகவும் முக்கியமான தருணம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ 2020 பெப்ரவரியில் முதல் வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டமை பகிரப்பட்ட செழுமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இருதரப்பு புரிந்துணர்வை பயன்படுத்துவதற்கு வழிசமைத்திருந்தது. இந்து சமுத்திரம் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் கிட்டிய அயல்நாடுஎன்ற ரீதியில் இலங்கையுடன் காணப்படும் நிலைபேறான நட்புறவை மேலும் வலுவாக்குவதற்கு இலங்கையின் தலைமைத்துவத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.


06. இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் கௌரவ கோபால் பாக்லேஅவர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர்
அலுவலகத்தில் இணைச் செயலராக பணியாற்றியுள்ளார்.


அதற்கு முன்னர் 2014 முதல் 2017 வரையான காலப்பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சில் அமைச்சின் பேச்சாளர், இணைச் செயலர் (வெளிவிவகார தொடர்புகள்) பிரிவு, இணைச்
செயலர் (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான்), இணைச் செயலர் (மாநிலங்கள்) உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

கௌரவ கோபால் பாக்லே அவர்கள் 2011 முதல் 2014 வரையில் பாகிஸ்தானுக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகராக பணியாற்றியதுடன் லண்டன், ரஷ்யா, காத்மண்டு மற்றும் உக்ரைனில் அமைந்துள்ள தூதரகங்களிலும் சேவையாற்றியுள்ளார்.

விஞ்ஞானத்துறை முதுநிலை பட்டதாரியான கௌரவ கோபால் பாக்லே அவர்கள் ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம், உக்ரேனியன், ரஷ்யன் மற்றும் நேபாளி மொழிகளை பேசும் திறன் உடையவர். அத்துடன் தற்போது இந்திய இல்லத்தில் சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்.

Last modified on Thursday, 14 May 2020 10:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd