உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் மக்களின் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த வைரசுக்கு சமூக இடைவெளி ஒன்றே தீர்வாக உள்ளது. இதனால் உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஊரடங்கால் உலக அளவில் பெண்கள் அதிக அளவில் கர்ப்பம் அடைவார்கள் என ஆய்வுகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையே துருக்கியில் மகளிர் நலம் மற்றும் மகப்பேறுவியல் சம்பந்தப்பட்ட இதழ் ஒன்று பெண்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது. 58 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இதில் ஊரடங்கு காலத்தில் பெண்களின் தாம்பத்ய செயல்பாடு முறை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முன்பு வாரத்துக்கு 1.9 முறை தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்ட நிலையில் அது ஊரடங்கு காலத்தில் 2.4 முறையாக அதிகரித்துள்ளதாக கூறி உள்ளனர். ஆனால், முன்பு பெண்களிடம் கர்ப்பமாகும் ஆசை 32.7 சதவீதமாக இருந்த நிலையில் அது ஊரடங்கு காலத்தில் 5.1 சதவீதமாக குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல தற்போது பெண்களின் மாதவிடாய் கோளாறு பிரச்சினைகளும் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. முன்பு 12.1 சதவீதமாக இருந்த மாதவிடாய் பிரச்சினை தற்போது 27.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் தாம்பத்ய ஆசைகள் மற்றும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களின் தாம்பத்ய வாழ்க்கைத்தரம் குறைந்துவிட்டதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.