தோல் அழற்சியை உண்டாக்கும், கொரோனா வைரஸ் உடன் தொடர்புடையது என்று கருதப்படும், ஒரு விதமான நோய்க்கு அமெரிக்கா மற்றும் மற்றும் பிரிட்டனில் உள்ள பல குழந்தைகள் ஆளாகியுள்ளனர்.
இவர்களில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையும் உள்ளது.
பிரிட்டனில் இதன் காரணமாக சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளிலும் தோலில் வீக்கமடைந்து சிவந்து போதல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நோய் எதிர்ப்பு திறன் காரணமா?
உடலில் நோயை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக நோய் எதிர்ப்பு அமைப்பு தாமதமான தாக்குதலில் ஈடுபடுவதால் நல்ல அணுக்களும் பாதிக்கப்படுவது இந்த நோய் உண்டாக காரணம் என்று கருதப்படுகிறது.
மிகவும் அரிதான, ஆனால் ஆபத்தான இந்த தொற்று குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் அதுகுறித்து கண்காணிக்குமாறு பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவை அதன் மருத்துவர்களுக்கு ஏப்ரல் மாதமே அறிவுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக உயிரிழந்த ஒரு 14 வயது குழந்தை உட்பட எட்டு குழந்தைகளுக்கு லண்டனின் இந்த நோய் ஏற்பட்டுள்ளது இந்த அறிவுறுத்தலுக்கு பிறகு கண்டறியப்பட்டது.
அதிகமான காய்ச்சல், தோல் சிவப்பது, கண்கள் சிவப்பது, வீக்கம் மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறிகளுடன் எவலினா லண்டன் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த அனைத்து குழந்தைகளுக்கும் இருந்தன.
அதற்கு முன்பும் அதற்கு முன்புவரை அந்தக் குழந்தைகள் யாருக்கும் நுரையீரல் அல்லது சுவாச கோளாறுகள் எதுவுமில்லை. எனினும் அவர்களில் ஏழு பேர் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை சரி செய்வதற்காக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது.
கவாசகி டிசீஸ் ஷாக் சின்ட்ரோம் எனப்படும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை தாக்கும் ஓர் அரிய நோயைப் போன்று இதுவும் ஒரு விவரிக்க முடியாத புதிய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நோய் இளம் வயதில் உள்ள குழந்தைகளை மட்டுமல்லாது 16 வயது வரை உள்ள குழந்தைகளையும் தாக்குகிறது.
அவர்களின் மிகச் சிறுபான்மையினர் மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.