ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் ராஜபக்சர்கள் புதிய சாதனையை படைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், ராஜபக்சர்கள் புதிய சாதனை படைத்து, அமைச்சரவையிலும் சாதனை படைக்கவுள்ளனர். அதற்கான திட்டங்களையே ராஜபக்சர்கள் வகுத்துவருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு தந்தைகளும் இரண்டு மகன்களும் பாராளுமன்றத்துக்கு தெரிவாவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.
அடுத்த பொதுத்தேர்தலில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
அவருடைய மகன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
அவருடைய மகனான சசீந்திர ராஜபக்ஷ, மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இவர்கள் அனைவரும் வெற்றியீட்டி, பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்தால், ஒரே குடும்பத்தை சேர்ந்த அதிகளவானோர். ஒரே தடவையில் பாராளுமன்றத்குள் பிரவேசித்துள்ளனர் என்ற சாதனையை ராஜபக்சர்கள் படைக்கமுடியும்.
அத்துடன் ஒவ்வொருவரும் அந்தந்த மாவட்டங்களில் ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளை பெற்று, முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடித்துகொண்டால், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டால், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆகக் கூடுதலானோர், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பெருமையும் ராஜபக்சர்களை சென்றடையும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூடுவதால், ராஜபக்சர்கள் ஐந்துபேர் அதில் அ்ங்கம் வகிப்பர்.
அதுமட்டுமன்றி, ஜனாதிபதியின் செயலணியும் கூடினால் பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து, ஆகக் கூடுதலாக ஆறு ராஜபக்சர்கள் ஒரேதடவையில் முக்கிய கூட்டத்தில் பங்கேற்றனர் என குறிப்பிடப்படும்.